
செனாவாங், ஜூலை 28 – மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வித் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று நெகிரி செம்பிலானிலுள்ள செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றுக்குப் பணிப்பயணம் மேற்கொண்டார்.
முதலில் செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குச் சென்ற அவர், மித்ரா மூலம் 202,360 ரிங்கிட் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள மடானி தளவாடப் பொருளுதவி, கல்வி மடானி மற்றும் ஸ்மார்ட் போர்டு திட்டங்களைப் பார்வையிட்டதுடன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் ரமணன் சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்குச் சென்று, 143,540 ரிங்கிட் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார். இரு பள்ளிகளிலும் கல்வி மடானி திட்டத்தின் கீழ் தலா 60 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமணன், ஸ்மார்ட் போர்டு திட்டம் ஆசிரியர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், வகுப்பறைக் கற்பித்தலை மேலும் பயனுள்ளதாக மாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, மித்ரா மூலம் வழங்கப்பட்டுள்ள மடானி தளவாடப் பொருளுதவியின் தரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், தரத்தில் தமக்கு திருப்த்தி என்று கூறினார்
மேலும், பள்ளி நேரத்திற்குப் பிறகு நடைபெறும் கல்வி மடானி வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி தொடர்பான சவால்கள் இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதாகவும், அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பள்ளிக்குத் தேவையான தளவாடங்கள் மற்றும் கல்வி வசதிகள் மாணவர்களின் கற்றல் சூழலை எவ்வாறு மேம்படுத்தியுள்ளன என்பது குறித்து செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் குணசேகரன் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
இதனிடையே, கல்வித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது மட்டுமல்லாமல், அவற்றின் செயல்திறனையும் தொடர்ந்து கண்காணித்து, பள்ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப மேம்பாடுகளை மேற்கொள்வதே அரசின் நோக்கம் என்றும், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் முயற்சிகள் மித்ரா மூலம் தொடரும் என்றும் அமைச்சர் ரமணன் தெரிவித்தார்.



