கோலாலம்பூர், ஆக 8 – சுபாங் ஜெயாவில் Kesas Shah Alam நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு முன் 37 வயது ஆடவரிடம் கொள்ளையிட முயன்ற நான்கு நபர்களை போலீசார் கைது செய்தனர். அந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான 46 வினாடி காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானது. உள்நாட்டைச் சேர்ந்த அந்த சந்தேகப் பேர்வழிகள் நேற்று மாலை மணி 5.30 அளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் Hussein Omar Khan தெரிவித்தார்.
30 முதல் 41 வயதுடைய அவர்கள் அனைவரையும் சுபாங் ஜெயா போலீஸ் தலைமையகத்தின் சிறப்பு கடுங் குற்றப்பிரிவைச் சேர்ந்த போலீஸ் குழுவினர் கைது செய்தனர். அந்த சந்தேக நபர்கள் அனைவரும் கிள்ளான் மற்றும் ஷா அலாம் வட்டாரங்களில் போதைப் பொருள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட பின்னணியை கொண்டிருந்தனர். அவர்களிடமிருந்து Nissan Almera கார், Yamaha LC 135 ரக மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக உசேய்ன் தெரிவித்தார்.