தோக்கியோ, ஏப்ரல் 17 – ஜப்பானின், “புல்லட் ரயில்” சேவையில் சிறிய தாமதம் ஏற்படுவது கூட மிகவும் அரிதானது. அதுவும், பாம்பு இருந்ததால், அதன் சேவையில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுவதை நம்ப முடிகிறதா?
உள்நாட்டு நேரப்படி செவ்வாய்கிழமை மாலை, நகோயா மற்றும் தோக்கியோ இடையே பயணித்த இரயிலில் அச்சம்பவம் நிகழ்ந்தது. இரயிலில், பதுங்கியிருந்த 40 சென்டிமீட்டர் அல்லது கிட்டத்தட்ட 16 இன்ச் பாம்பு குறித்து பயணி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், அந்த பாம்பு எங்கிருந்து, எவ்வாறு இரயிலில் ஏறியது என்பது தெரியவில்லை.
புல்லட் இரயில் பயணிகள், நாய்கள், பூனைகள் மற்றும் புறாக்கள் உட்பட பிற விலங்குகளை உடன் கொண்டு செல்ல அனுமதி உண்டு, ஆனால், பாம்புகளை கொண்டு செல்ல முடியாது.
எனினும், அதனால், பயணிகளிடையே காயமோ, பீதியோ ஏற்படவில்லை என்பதை, மத்திய ஜப்பான் ரயில்வே நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வேளையில், பயணிகள் பையிலிருந்து அந்த பாம்பு இரயில் ஏறியதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாம்பு அடையாளம் காணப்பட்ட, இரயில் முதலில் ஒசாகாவிற்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும், அந்த பயணத்திற்கு வேறு ரயிலைப் பயன்படுத்த நிறுவனம் முடிவு செய்ததை தொடர்ந்து, அப்பயணம் சுமார் 17 நிமிடங்கள் தாமதமானதாக கூறப்படுகிறது.