
ஜோகூர் பாரு, செப்-14-ஜோகூர், Mid Valley Southkey வணிக வளாகத்தைக் குறிவைத்து மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்துள்ளது. காவல்துறை நடத்திய தீவிர சோதனையில் வெடிபொருட்கள் ஏதும் அங்கு கண்டறியப்படவில்லை.
நேற்றிரவு 11.31 மணியளவில் வணிக வளாக நிர்வாகத்திடமிருந்து தகவல் கிடைத்ததை அடுத்து, வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு சம்பவ இடத்துக்கு விரைந்து அனுப்பப்பட்டதாக ஜோகூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ Ab Rahaman Arsad தெரிவித்தார்.
ஜோகூர் மாநிலக் காவல் தலைமையகத்தின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவும் தென் ஜோகூர் பாரு மாவட்டக் காவல் தலைமையகத்தின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவும் இணைந்து, கட்டிடத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் சோதனை நடத்தின. சோதனையின் போது சில சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கண்டறியப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. எனினும் அவை வெடிபொருட்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அவ்வணிகப் பகுதி முழுமையாகப் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இவ்வேளையில், வெடிபொருட்கள் தொடர்பான மிரட்டல்களை காவல்துறை மிகவும் தீவிரமாகக் கருதுவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அத்தகைச் சம்பவங்களில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் Ab Rahaman குறிப்பிட்டார்.



