
ஜோகூர், குளுவாங், செப்டம்பர் 18 – கடந்த ஜூன் மாதம் நான்கு பேர் கொண்ட ஒரே குடும்பம் சாலை விபத்தொன்றில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அவ்விபத்தை ஏற்படுத்திய 19 வயது பல்கலைக்கழக மாணவன் மீது, கவனக்குறைவாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் பல்கலைக்கழகத்தில் பயிலும் அவர், இன்று குளுவாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அக்குற்றத்தை மறுத்துள்ளார்.
ஜூன் 1ஆம் தேதி ரெங்காம்–சிம்பாங் ரெங்காம் சாலையின் 27ஆவது கிலோமீட்டரில், மற்ற சாலைப் பயனர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் காரை ஓட்டியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்ட இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 15,000 ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
நீதிமன்றம் சந்தேக ஆடவருக்கு 10,000 ரிங்கிட் பிணைத்தொகையை விதித்து, அருகிலுள்ள காவல் நிலையத்தில் மாதம் ஒருமுறை ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டது. இந்த வழக்கு நவம்பர் 20ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது.



