
ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 24 – ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா தேவி சக்தி பீட ஆலயத்தின் வருடாந்திர தீமிதித் திருவிழா எதிர்வரும் அக்டோபர் 3-ஆம் தேதி சனிக்கிழமை விமரிசையாக நடைபெறவுள்ளது.


அன்றைய தினம் மாலை 5 மணிக்குத் தொடங்கும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இரவில் தீமிதி உற்சவம் நடைபெறும்.
இந்த தீமிதி உற்சவம், ஆலயத்தில் 21 அடி உயர ஸ்ரீ Dakshina காளி தேவிக்கு முன்பாக வீற்றிருக்கும் கருங்கல் திரௌபதி அம்மனுக்காக பிரத்யேகமாக நடத்தப்படுகிறது.
திருவிழாவை முன்னிட்டு செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. இந்த நாட்களில் சிறப்பு உபயம் ஏற்க விரும்பும் பக்தர்கள் ஆலய நிர்வாகத்தைத் தொடர்புகொள்ள அறிவுத்தப்படுகின்றனர்.
சிங்கப்பூர் துவாஸ் மற்றும் ஃபோரஸ்ட் சிட்டிக்கு அருகில் அமைந்துள்ள இந்த ஆலயம், பல்வேறு தனிச்சிறப்புகளைக் கொண்ட வழிபாட்டுத் தலமாகவும் விளங்குகிறது.
பெண் தெய்வங்களை முதன்மையாகக் கொண்டு மொத்தம் 54 தெய்வங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மேலும், தென்கிழக்காசியாவிலேயே முதன்முறையாக 12 அடி உயர ஆதிசக்தி பார்வதி கால பைரவி தேவி, 21 அடி உயர ஸ்ரீ தக்ஷிண காளி தேவி மற்றும் உலகிலேயே மிக உயரமானதாகக் கூறப்படும் 7.2 அடி காமாட்சி அம்மன் சிலையும் இங்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ளன என்பது சிறப்பு.
அண்மையில் இந்த ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவின் முதலாவது ஸ்ரீ விஷ்ணுமாயா சுவாமி தேவஸ்தானம் இதுவாகும். மேலும், தென்கிழக்காசியாவிலேயே இவ்வாலயத்தில் மட்டுமே விஷ்ணுமாயா தெய்வ அருள்வாக்கு வழங்கப்படுவதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை, ஆலய மடாதிபதி ஸ்ரீ வித்யானந்த சர்மா சுவாமிகளால் இந்த தெய்வ அருள்வாக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே மேல் விவரங்களுக்கும் முன்பதிவுக்கும் திரையில் காணும் எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.



