ஜோகூர் பாரு, அக்டோபர்-15, ஜோகூர் பாருவில் அலட்சியமாகவும் ஆபத்தாகவும் புரோட்டோன் ஈஸ்வாரா காரை ஓட்டிச் சென்ற ஆடவர் கைதாகியுள்ளார்.
பின்னால் வந்த வாகனத்தின் dashcam-மில் பதிவாகி வைரலான 80 வினாடி வீடியோவில், Jalan Kempas Lama-விலிருந்து Jalan Setia Tropika Utama செல்லும் சாலையில் அக்கார் மிகவும் ஆபத்தான வகையில் ஓட்டிச் செல்லப்படுகிறது.
படுவேகத்தில் வாகனங்களை அடுத்தடுத்து முந்திச் செல்வதும், திடீர் திடீரென பிரேக் வைப்பதுமாக சென்ற அவ்வாடவர், மற்ற வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திடீரென சாலை நடுவே காரை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
வீடியோ வைரலான நிலையில், தானாகவே முன்வந்து மாவட்ட போலீசிடம் சரணடைந்த போது, 34 வயது அந்நபர் கைதுச் செய்யப்பட்டார்.
தொடக்கக் கட்ட சிறுநீர் மற்றும் மதுபோதை பரிசோதனையில், அவர் போதைப் பொருள் எதுவும் பயன்படுத்தவில்லை என்றும் மதுபோதையில் இல்லை என்பதும் உறுதிச் செய்யப்பட்டதாக ஜோகூர் பாரு போலீஸ் கூறியது.
ஆபத்தாக வாகனமோட்டியதற்காக அந்நபருக்கு, 5 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் 5,000 முதல் 15,000 ரிங்கிட் வரையில் அபராதம் விதிக்கப்படலாம்.