
கோலாலம்பூர், ஜூன்-23-மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசாங்கத்துக்கும் ஜோகூர் மாநிலத்திற்கும் இடையிலான நெருங்கிய உறவு மேலும் வலுப்படுத்தப்பட இணக்கம் காணப்பட்டுள்ளது.
நேற்று, கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா புக்கிட் துங்குவில், ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு மக்கோத்தா இஸ்மாயில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்தித்துப் பேசினார்.
ஜோகூர் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்த இரு தலைவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் இந்தச் சந்திப்பில் இடம்பெற்றன.
அதன்போது, மத்திய அரசுக்கும் ஜோகூருக்கும் இடையே இணக்கமான உறவைப் பேணுவதில் பிரதமரின் அக்கறைக்கு TMJ தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், ஜோகூர் மக்களின் நலனை உறுதிச் செய்வதற்காக, மத்திய அரசு எப்போதும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இவ்வேளையில், இந்த வியூகப் பங்காளித்துவம் தொடர்ந்து வலுப்படுத்த புத்ராஜெயா கடமைப்பட்டுள்ளது என பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனி அறிக்கையில் உறுதியளித்தார்.
அச்சந்திப்பு நட்புறவோடும் நல்லிணக்கத்தோடும் அமைந்ததாகவும் அன்வார் குறிப்பிட்டார்.
முன்னதாக ‘வருவாய் கசிவு’ தொடர்பில் TMJ – அன்வார் இடையில் கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், இருவரும் நேரில் சந்தித்து பேசியிருப்பது, இரு தரப்பு உறவுகள் குறித்த அரசியல் ரீதியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.



