
சைபெர்ஜெயா, மே-18-மலேசியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், உலகத் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினம் (WTISD) மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பெண்களுக்கான தினம் (GICT) 2026 ஆகியவற்றின் கூட்டுக் கொண்டாட்டத்தைத், தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ சிங் இன்று சுபாங்கில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
“டிஜிட்டல் வாழ்வாதாரங்கள்: இணைந்த உலகில் நிலைத்தன்மையை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவில் பேசிய துணையமைச்சர், நாட்டில் மக்கள் வாழும் பகுதிகளில் 5G இணையச் சேவை தற்போது 82 விழுக்காட்டைக் கடந்து சாதனை படைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், மலேசியாவின் இணையப் பயன்பாட்டு விகிதம் ஆண்களிடையே 98.4 விழுக்காடாகவும், பெண்களிடையே 97.6 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது என்றார் அவர்.
மலேசிய மடானி கோட்பாட்டின் கீழ், நாட்டின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தில் பெண்கள் மற்றும் கிராமப்புற மக்கள் அனைவரும் பங்கேற்பதை உறுதிச் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, NADI எனப்படும் தேசிய தகவல் பரப்பு மையத்தில் தற்போது 1.9 மில்லியன் பயனர்கள் பதிவுச் செய்துள்ளனர்; அவர்களில் 53 விழுக்காட்டினர் பெண்கள் ஆவர்.
பெண்களின் டிஜிட்டல் மற்றும் தொழில்முனைவோர் திறன்களை மேம்படுத்த NADI EmpowerHER போன்ற பிரத்யேகத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் தியோ நீ சிங் கூறினார்.



