
கோலாலம்பூர், அக்டோபர்-22,நாடு முழுவதும் உள்ள 53,000 டேக்ஸி, வாடகைக் கார் மற்றும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் சிறப்பு நிதியுதவியை அரசாங்கம் வழங்குகிறது.
2027 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட இந்த ஒருமுறை உதவியின் மூலம், 38,000 டேக்ஸி மற்றும் வாடகைக் கார் ஓட்டுநர்களும், 15 ஆயிரம் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களும் பயனடைவர் என, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சின் சிறப்பு வாகனப் பதிவு எண்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து இந்த உதவிக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த வருவாயிலிருந்து வேறு சில நன்மைகளும் கிடைக்கவே செய்கின்றன.
MyLesen வாகனமோட்டும் உரிமத் திட்டம், தலைக் கவசத் தொப்பியை இலவசமாக மாற்றிக் கொள்ளும் திட்டம், பல்கலைக்கழக மாணவர்களுக்கான FLYsiswa விமான டிக்கெட் மானிய உதவி, டேக்ஸி மற்றும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கான சமூகப் பாதுகாப்பு உள்ளிட்டவை அவற்றிலடங்கும்.
இவ்வேளையில், மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்களின் பாதுகாப்புக்காக, இவ்வாண்டு மட்டுமே, 70,000 ஹெல்மட்டுகளை இலவசமாக வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆக, சிறப்பு வாகனப் பதிவு எண்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் திரும்ப மக்களுக்கே போய்ச் சேருவதாக அவர் சொன்னார்.
இந்த உதவியைப் பெற ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கவோ, படிவங்களை நிரப்பவோ தேவையில்லை.
APAD மற்றும் LPKP உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பதிவுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் இயல்பாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அக்டோபர் மாதம் தொடங்கி, கட்டம் கட்டமாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் நேரடியாகச் செலுத்தப்படும்.
தகுதி இருந்தும் பட்டியலில் இடம்பெறாத ஓட்டுநர்கள், தங்களது சங்கங்கள் வழியாகப் பெயர்களைச் சமர்ப்பிக்கலாம்.



