
பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்-15,தாமான் மேடான் ஜெயாவில் அண்மையில் நிகழ்ந்த ஆயுதமேந்திய மோதலுக்கும் இனப் பிரச்சனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சிலாங்கூர் போலீஸ் தெளிவுப்படுத்தியுள்ளது.
மாறாக, அங்குள்ள குடியிருப்புப் பகுதியின் நிர்வாகக் குழு, சட்டவிரோதமாகச் செயல்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வணிக வளாகத்திற்கான மின்சார விநியோகத்தைத் துண்டித்ததே இம்மோதலுக்குக் காரணம் என மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ Sazeli Kahar தெரிவித்தார்.
மின்சார இணைப்பை மீண்டும் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் தனது நண்பர்களுடன் குடியிருப்பு நிர்வாகத்தினரையும் குடியிருப்பாளர்களையும் எதிர்கொண்டதாக அவர் கூறினார்.
அக்டோபர் 9-ஆம் தேதி நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பான வீடியோவில், சிலர் பாராங் கத்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் பரவியது.
இச்சம்பவம் தொடர்பில் 5 ஆடவர்கள் கைதுச் செய்யப்பட்டு, ஒரு நாள் தடுப்புக்காவலுக்குப் பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
விசாரணை அறிக்கை இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், இச்சம்பவத்தை இனப் பிரச்சினையாகச் சித்தரிக்க வேண்டாம் என்றும் Sazeli கேட்டுக் கொண்டார்.



