
சென்னை, ஆகஸ்ட்-22-தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டத்திற்கான’ டெண்டர் ஒப்பந்தத்தை இறுதிச் செய்து, முன்னணி நகை நிறுவனங்களான ஜோயாலுக்காஸ் (Joyalukkas) மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் (Kalyan Jewellers) ஆகியவற்றுக்கு தமிழ்நாடு அரசு பணி ஆணை வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் சுமார் 441,000 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் நடத்திய டெண்டர் ஆய்வில், செய்கூலி மற்றும் சேதாரம் உள்ளிட்ட கூடுதல் கட்டணங்களுக்கு வெறும் ஒரு பைசா (₹0.01) எனக் குறிப்பிட்டு ஜோயாலுக்காஸ் மிகக் குறைந்த விலைப்புள்ளியை வழங்கியது.
இதனைத் தொடர்ந்து, 70:30 என்ற விகிதத்தில் ஜோயாலுக்காஸ் நிறுவனத்திற்கு 70 விழுக்காடும், கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கு 30 விழுக்காடும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளையும் தாய்மார்களையும் கௌரவிக்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழர்களின் பாரம்பரிய தாய்மாமன் சீர் மரபைப் போற்றும் இந்த முன்னோடித் திட்டம், வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி முதல்வர் ஜோசப் விஜய் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கிறார்.
அரசு மருத்துவமனை சேவைகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
விஜயின் TVK கட்சிக்கு மே மாதத் தேர்தலில் ஏராளமான பெண்கள் வாக்களித்ததற்கு, இந்த ‘தாய்மாமன் தங்க மோதிர திட்டம்’ தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டதும் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.



