
தாய்லாந்து, ஜூன்-3–தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் 100,000 ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புள்ள நான்கு அரிய வெளிநாட்டு பறவைகள் நேற்று இரவு பெங்காலான் குபோர் (Pengkalan Kubor) பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டன.
PGA போலீசார் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது, சுங்கை கோலோக் (Sungai Golok) ஆற்றங்கரையிலுள்ள சட்டவிரோத துறையில் ஒருவர் படகிலிருந்து பறவைக் கூண்டுகளை இறக்கிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதிகாரிகளை கண்டதும் அந்த நபர் படகில் ஏறி தாய்லாந்து பகுதிக்குத் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையில், இரண்டு Blue-and-Gold Macaw பறவைகளும், இரண்டு Blue-fronted Amazon பறவைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
மேலும், 200 ரிங்கிட் மதிப்புள்ள இரண்டு கூண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தப் பறவைகள் மலேசியாவில் விற்பனை செய்வதற்காக தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்தச் சம்பவம் 2010ஆம் ஆண்டு வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



