
கோலாலம்பூர், நவ-04-சிலாங்கூர், ஷா ஆலாம் சுற்றுவட்டாரத்தில் பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சில முக்கியச் சாலைகள் நீரில் மூழ்கின. குறிப்பாக NKVE, ELITE, GCE ஆகியவை இன்று அதிகாலை தொடங்கி போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன. அதனால் வாகனங்கள் மாற்றுப் பாதைகளுக்குத் திருப்பி விடப்பட்டன.
அதிகாலை 4.07 மணியளவில் ஷா ஆலாம் – சுபாங் இடையிலான NKVE விரைவுச்சாலையின் 9.1ஆவது கிலோமீட்டரில் வெள்ளம் ஏற்பட்டதாக PLUS அறிக்கையொன்றில் தெரிவித்தது. அதனை அடுத்து, இரு திசைகளிலும் அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டன. Bukit Rajaவில் வடக்கு நோக்கிச் செல்லும் வாகனங்கள் Setia Alam வழியாகவும், Subangங்கில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் வாகனங்கள் ELITE வழியாகவும் திருப்பி விடப்பட்டன.
அதிகாலை 3.20 மணிக்கு வெள்ளம் காரணமாக ஷா ஆலாம் டோல் சாவடிக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும் மூடப்பட்டன. காலை 5.30 மணிக்கு Seafield – Setia Alam இடையிலான ELITE விரைவுச்சாலையின் Shah Alam சந்திப்பும் மூடப்பட்டது. Seafieldடில் இருந்து Shah Alam நோக்கிச் செல்லும் வாகனங்கள் தற்காலிகமாக Shah Alam டோல் சாவடி வழியாகத் திருப்பி விடப்பட்டன.
இதனிடையே, காலை 5.42 மணியளவில் NKVE சந்திப்பிலும் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக PROLINTAS GCE நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன் காரணமாக, அங்குள்ள B, C, D ஆகிய சரிவுப் பாதைகள் முழுமையாக மூடப்பட்டன. வாகனமோட்டிகள் போக்குவரத்து அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
மேலும், Paya Jaras செல்லும் வழியில் Jalan Gajah 16 அருகிலுள்ள பாலம் சேதமடைந்ததால், அப்பாதையில் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளதாக சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், Paya Jaras பகுதி குடியிருப்பாளர்கள் Kampung Kubu Gajah நோக்கிச் செல்லும் பாதையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பதிவைப் பகிர்ந்த பயனர் ஒருவர் குறிப்பிட்டார்.



