
புக்கிட் மெர்தாஜாம், செப்-04-பினாங்கு, Jalan Sungai Lembu பகுதியில் உள்ள பயன்படுத்தப்பட்ட வாகனப் பழுதுபார்க்கும் பட்டறையில் நேற்று துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்த 43 வயதுடைய ஆடவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
வாகனங்களைப் பழுது பார்க்கும் வேலை செய்து வந்த அந்நபர் சம்பவத்துக்குப் பின் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார். அவரது வலது உள்ளங்கையில் காயமும் கையின் எலும்புகளில் முறிவும் ஏற்பட்டுள்ளது. சிகிச்சை வழங்கிய பின் அவ்வாடவர் தற்போது நலமாக இருப்பதாக Seberang Perai Tengah மாவட்ட காவல் துறை தலைவர் உதவி ஆணையர் Nik Aminuddin Raja Abdullah தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் அவ்வாடவரை அணுகியதாகவும் அவர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதிலிருந்து தப்ப அவ்வாடவர் அருகிலிருந்த சீனக் கல்லறைப் பகுதிக்குள் சுமார் 50 மீட்டர் தூரம் ஓடிய நிலையில், சந்தேக நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தைச் சோதனையிட்ட காவல் துறையினர், சில தடயப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்களையும் துப்பாக்கிச் சூட்டுக்கான நோக்கத்தையும் கண்டறிய அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 307-ன் கீழ் விசாரிக்கப்படுவதாக Nik Aminuddin கூறினார்.
சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தையோ அல்லது விசாரணை அதிகாரியை 017-4825017 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வேளையில், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பவோ, ஆரூடங்களை வெளியிடவோ வேண்டாம் என காவல் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.



