
ஜோகூர், நவம்பர் 4 – தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கையில் நகராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகளின் பணிக்கு இடையூறு ஏற்படுத்திய தாய் மற்றும் மகளுக்கு தலா 500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
52 வயதான இந்தோனேசியப் பெண் மற்றும் அவரது 24 வயது மகள் ஆகிய இருவரும் இன்று மூவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
கடந்த அக்டோபர் 29ஆம் தேதி அதிகாலை 5.45 மணியளவில் தாமான் பிந்தாங் எமாஸ் , புக்கிட் பாசிர் (Taman Bintang Emas, Bukit Pasir) பகுதியில் தெருநாய்களைப் பிடிக்கும் நடவடிக்கை நடைபெற்றது.
அப்போது, நகராட்சி மன்ற அதிகாரிகள் இரண்டு நாய்களைப் பிடித்த நிலையில், அவற்றை விடுவிக்க முயன்ற தாய், மகள் இருவரும் அதிகாரியின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தினர்.
மேலும், நாய்களைப் பிடிக்கப் பயன்படுத்திய உபகரணங்களையும் அவர்கள் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தடுக்க முயன்ற பெண் அமலாக்க அதிகாரி கீழே விழுந்தார்.
இவ்வழக்கில் இருவருக்கும் தலா 500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 30 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இருவரும் அபராதத்தைச் செலுத்தினர்.



