
கோலாலம்பூர், ஜூலை-16-மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC ஏற்பாட்டில், மூன்றாவது ஆண்டாகத் தொடர்ந்து நடைபெறவுள்ள ‘அனைத்துலக ஒழுங்குமுறை மாநாடு 2026’ (IRC 2026), வரும் ஜூலை 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கோலாலம்பூர் Shangri-La ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டு, 2025-ஆம் ஆண்டைத் தொடர்ந்து, தற்போது மூன்றாவது முறையாக இந்த மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இது உலகளாவிய தொலைத்தொடர்புக் கொள்கைகளில் மலேசியாவின் தலைமைத்துவத்தை உலகிற்குப் பறைசாற்றும் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
‘அடுத்த டிஜிட்டல் யுகத்தை வடிவமைத்தல்: ஒழுங்குமுறை, நெகிழ்வுத்தன்மை மற்றும் நம்பிக்கை’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த 2-நாள் மாநாட்டை, தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கிறார்.
AI தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, தரவுத் தனியுரிமை மற்றும் சமூக ஊடக ஒழுங்குமுறைகள் குறித்து உலகளாவிய வல்லுநர்கள் இதில் விரிவாக விவாதிக்கவுள்ளனர்.
டிஜிட்டல் பொருளாதாரப் புத்தாக்கம் மற்றும் பயனர்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், https://rsvp.kreasia.my/IRC2026/ என்ற இணையத் தளத்திற்குச் சென்று இப்போதே பதிவுச் செய்துகொள்ளலாம்.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ள உலக நாடுகளுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இம்மாநாடு அமையும் என MCMC நம்பிக்கை தெரிவித்துள்ளது.



