Latestமலேசியா

நஜிப் வீட்டுக் காவல் விவகாரம்: லோக் விலகியதைத் தொடர்ந்து DAP-க்கு சவால்

கோலாலம்பூர், செப்- 21-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் பதவி விலக செய்துள்ள முடிவு, DAP கட்சிக்கு சவாலான சூழ்நிலையைக் கொண்டு வந்துள்ளது. அக்கட்சியின் கொள்கை நிலைப்பாட்டையும் அரசாங்கத்தின் அரசியல் நிலைத்தன்மையையும் சமநிலைப்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

லோக்கின் முடிவு DAP-ன் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதுடன், அரசாங்கத்தை நிலைத்தன்மையற்றதாக்கக்கூடிய நடவடிக்கையைத் தவிர்ப்பதற்கான முயற்சியாக இருப்பதாக மலாயா பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் டாக்டர் Mohammad Tawfik Yaakub தெரிவித்துள்ளார்.

வீட்டுக் காவல் தொடர்பான முடிவை, தங்கள் அடிமட்டத் தொண்டர்களிடம் எவ்வளவு உறுதியாகவும் நம்பகத்தன்மையுடனும் DAP-ஆல் நியாயப்படுத்த முடிகிறது என்பது அக்கட்சிக்குச் சவாலாக இருக்கும் என Tawfik குறிப்பிட்டார்.

இதனிடையே, லோக் மட்டும் ஏன் பதவி விலக வேண்டும் என மலேசிய அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் டாக்டர் Lau Zhe Wei கேள்வி எழுப்பியுள்ளார். DAP அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகுவது குறித்து பரிசீலிக்கலாம். என்றாலும் அது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கான நாடாளுமன்ற ஆதரவை உடனடியாகத் திரும்பப் பெறுவதைக் குறிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார்.

நஜிப்பிற்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை DAP-க்கு ஏற்றுக் கொள்வது கடினம் எனக் குறிப்பிட்ட லோக், மாமன்னரின் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை கட்சி மதிப்பதாகவும் தெரிவித்திருந்தார். தமது பதவி விலகல் தனிப்பட்ட முடிவாகும் என்றும், மற்ற DAP அமைச்சர்கள் அரசாங்கத்தில் தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

நஜிப், SRC International தொடர்பான வழக்கில் எஞ்சிய தண்டனையை 2028 ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் அனுபவிக்க நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அம்முடிவு தொடர்பான DAP-ன் நிலைப்பாடு கட்சியின் அடுத்தகட்ட அரசியல் அணுகுமுறையில் கவனம் பெறும் விவகாரமாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!