Latestமலேசியா

நஜீப்புக்காக நிதி திரட்டுவது முட்டாள்தனம்; அரசியல் தலைவர்களைக் கேள்விகளால் திணறடித்த பல்கலைக்கழக மாணவி

கோலாலம்பூர், அக்டோபர்-16,ஊழல் விவகாரம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் எழுப்பிய துணிச்சலான கேள்வி, 3 முக்கிய அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மலாயா பல்கலைக்கழக மாணவி Ummi Umairah Bakhit, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த பொது மக்களிடம் நன்கொடை திரட்டப்படுவதைத் தாம் பார்த்ததிலேயே மிகப்பெரிய முட்டாள்தனமான செயல் என விமர்சித்தார்.

தாபோங் ஹாஜி ஊழல் விவகாரத்தையும் சுட்டிக்காட்டிய அவர், ஊழலுக்கும் அதிகார ஆதிக்கத்திற்கும் எதிராக வருங்காலத் தலைவர்கள் எவ்வாறு துணிச்சலுடன் குரல் எழுப்ப வேண்டும்? உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் எவ்வாறு செயல்பட வேண்டும்? எனக் கேள்வி எழுப்பினார்.

உயர் கல்வி அமைச்சின் ஆதரவுடன் கோலாலம்பூர் உலக வாணிப மையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் இந்தக் கேள்வியை முன்வைத்தார்.

அவரின் இந்தக் கேள்விகள் அரங்கையே பரபரப்பாக்கியது.

இதற்குப் பதிலளித்த சுகாதார முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின், தவறு என்றால் தவறுதான். அது சொந்தத் தலைவர்களுடன் தொடர்புடையதாக இருந்தாலும் ஊழலைக் கண்டிக்கத் தயங்கக்கூடாது என்றார்.

தற்காத்துப் பேச முடியாத தவறுகளை நியாயப்படுத்தக்கூடாது என்றும், நேர்மையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என்றும் கைரி வலியுறுத்தினார்.

இதனிடையே, இளைஞர்கள் இன்னமும் ஊழல் குறித்து அக்கறை கொண்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகச் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி பேசுகையில், ஊழல் என்பது நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்கும் புற்றுநோய் என வருணித்தார்.

இருப்பினும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் அரசியல் பாகுபாடின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அமுலாக்க அமைப்புகள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மாணவியின் தைரியமான கேள்வியும் அரசியல் தலைவர்களின் பதில்களும் தற்போது சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!