
பங்சார், அக்டோபர்-27, மக்கள் நலத் திட்டங்கள் குறித்த தகவல்கள் மக்களைச் சென்றடைவதை உறுதிச் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அவ்வாறு உறுதியளித்துள்ளார்.
ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்ட போதும், மக்களுக்கு குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கு அது குறித்த தகவல்கள் போய் சேருவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, அரசாங்க உதவிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பன உள்ளிட்ட தகவல்களை மக்களிடத்தில் சரியாகவும் விரைவாகவும் கொண்டுச் சேர்க்குமாறு அதிகாரிகளை தாம் பணித்திருப்பதாக ஃபாஹ்மி சொன்னார்.
இவ்வேளையில், உள்ளூர் மக்கள் தங்களின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள உதவும் செஜாத்தி மடானி திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு, இந்தியச் சமூக அமைப்புகளை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதுவரை 9 இந்தியச் சமூக அமைப்புகளுக்கு செஜாத்தி மடானி திட்டத்தின் வாயிலாக தொழில் அபிவிருத்திக்கு அதிகபட்சம் 1 லட்சம் ரிங்கிட் வரை நிதியுதவி கிடைத்திருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
கோலாலம்பூர், பங்சார் அருள்மிகு ஸ்ரீ ராமலிங்க ஈஸ்வரர் திருக்கோயிலில் இன்று தீபாவளி அன்பளிப்புகள் வழங்கியப் பிறகு, லெம்பாய் பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபாஹ்மி அவ்வாறு கூறினார்.
அந்நிகழ்வில் 300 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
அவர்களில் 250 பேர் வசதி குறைந்த பெரியவர்களும் முதியவர்களும் ஆவர்.
அதோடு, பங்சார் தமிழ்ப் பள்ளி மற்றும் சரஸ்வதி தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு பற்றுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன.
கோவில் நிர்வாகத்துக்கும் ஃபாஹ்மி 20,000 ரிங்கிட் நன்கொடை வழங்கினார்.
சமூக நல நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த அந்நிதி பயன்படும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.