Latestமலேசியா

நாடு திருப்பி அனுப்பப்பட்ட 1,476 மியான்மர் நாட்டவர்கள்

லுமுட், செப்டம்பர் 29 – குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 1,476 மியான்மர் நாட்டவர்கள், ‘Ops Pier 1.0’ நடவடிக்கையின் கீழ் இன்று அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் அவர்கள் மஞ்சோங் விளையாட்டு அரங்கில் ஒன்றுதிரட்டப்பட்டு, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், காலை உணவு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, 46 பேருந்துகளில் லுமுட்டிலுள்ள மலேசிய அரசக் கடற்படைத் தளத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

உள்துறை அமைச்சின் துணைச் செயலாளர் டத்தோ மாக்சான் மஹியுதீன் கூறுகையில், 5,000 மியான்மர் நாட்டவர்களைப் படிப்படியாகத் திருப்பி அனுப்புவதற்கான திட்டத்தின் முதல் கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடு திரும்பிய அனைவரும் உரிய முறையில் அடையாளம் காணப்பட்டதுடன், தங்களது சொந்த நாட்டிற்குத் தன்னார்வமாகத் திரும்ப அவர்கள் ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

திருப்பி அனுப்பப்பட்டவர்களில் 1,370 ஆண்கள், 79 பெண்கள் மற்றும் 27 குழந்தைகள் அடங்குவர். 8 முதல் 60 வயதிற்குட்பட்ட இவர்கள், நாடு முழுவதுமுள்ள 14 குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். மியான்மர் அரசு வழங்கிய மூன்று கடற்படைக் கப்பல்கள் மூலம் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மலேசியக் கடற்படை மற்றும் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!