
புத்ராஜெயா, ஏப்ரல்-12-சில Shell பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகத் தகவல் வெளியான நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாக, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN உத்தரவாதம் அளித்துள்ளது.
குறிப்பிட்ட சில இடங்களில் தேவையற்ற அச்சம் காரணமாக பெட்ரோல் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் தற்காலிக விநியோகத் தடை ஏற்பட்டதாக, துணையமைச்சர் டத்தோ Dr ஃபுசியா சாலே விளக்கமளித்தார்.
எனவே, பொது மக்கள் பீதியடைந்து அவசியமின்றி எரிபொருளை வாங்கிக் குவிக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.
மத்தியக் கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள போதிலும், மலேசியாவில் RON95 பெட்ரோல் விலை தொடர்ந்து 1 ரிங்கிட் 99 சென்னாகவே நீடிக்கும்.
மானிய விலையிலான இந்த எரிபொருள் முறையாக விநியோகிக்கப்படுவதை அரசு உறுதிச் செய்யும் என்றார் அவர்.
விநியோகக் குறைபாடுகளைச் சரிசெய்ய எண்ணெய் நிறுவனங்களுடன் KPDN இணைந்து செயல்பட்டு வருகிறது.
நிலைமை விரைவில் சீராகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஃபுசியா சொன்னார்.



