கோலாலம்பூர், ஏப்ரல் 6 – பேராக், Royal Belum தேசியப் பூங்காவில் நேற்று முன்தினம் புலி தாக்கி ஆடவர் காயமடைந்தது, மூன்றாண்டுகளில் நாட்டில் பதிவான அத்தகைய ஏழாவது சம்பவமாகும்.
புலி மனிதர்களைத் தாக்கிக் காயப்படுத்தும், கொல்லும் சம்பவங்கள் குறிப்பாக கிளந்தான், பேராக் மாநிலங்களில் அதிகரித்து வருகின்றன.
அதை இனியும் தடுக்கும் முயற்சிகளை வனவிலங்குப் பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்கா துறை (Perhilitan) தீவிரப்படுத்த வேண்டும் என அதன் இயக்குனர் Datuk Abdul Kadir Abu Hashim தெரிவித்தார்.
புலிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதற்கு அவற்றின் வாழ்விடம் சுருங்கி வருவதே காரணம்.
கட்டுப்பாடற்ற நிலப் பயன்பாடு அல்லது நில ஆக்கிரமிப்புதான் புலிகள் வன்முறையாக மாறுவதற்கு முக்கியக் காரணம்;
இதனால் அசல் வாழ்விடத்தை விட்டு வெளியேறி மக்கள் குடியிருப்புகளை அவை ஆக்கிரமிப்பதாக டத்தோ Abdul Kadir சொன்னார்.
காடுகளை மனிதன் ஆக்கிரமித்து காடுகளின் அளவு குறைந்து வருவதால், புலிகளுக்கு உணவாக இருக்கும் விலங்குகளின் எண்ணிக்கையும் குறைகிறது.
புலிகள் மனிதர்களை இலக்காக மாற்றும் காரணிகளில் இதுவும் ஒன்று என்றார் அவர்.
முன்னதாக, வனவிலங்கு பாதுகாப்பு சங்கத்தின் (WCS) மலேசிய இயக்குனர் டாக்டர் மார்க் ரேயன் தர்மராஜ், காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், புலிகள் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கும் அளவுக்கு ஆக்ரோஷமாக மாறி வருவதாகக் கூறியிருந்தார்.