நெகிரி செம்பிலானின் புதிய மந்திரி பெசார் யார்? அரண்மனையிடம் 3 பெயர்களைச் சமர்ப்பித்த சாஹிட் ஹமிடி

சிரம்பான், ஆகஸ்ட்-2 – நெகிரி செம்பிலானின் புதிய மந்திரி பெசாரைத் தேர்ந்தெடுப்பதற்காக, பாரிசான் நேஷனல் (BN) தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி, 3 பேரின் பெயர்களை அம்மாநில சமஸ்தானாதிபதி துவாங்கு முஹ்ரிஸ் அவர்களிடம் சமர்ப்பித்துள்ளார்.
Istana Hinggap அரண்மனையில் நடைபெற்ற இச்சந்திப்பில், ஆட்சியமைக்க உரிமைக் கோரும் அதிகாரப்பூர்வக் கடிதத்தை வழங்கியத் துணைப் பிரதமர், இந்த மூன்று பெயர்களில் ஒருவரை மந்திரி பெசாராகத் தேர்ந்தெடுப்பது மாநில ஆட்சியாளரின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது எனத் தெரிவித்தார்.
நேற்றையத் தேர்தலில் பாரிசான் 18 தொகுதிகளிலும், அதன் அதிகாரப்பூர்வமற்ற பங்காளியான பெரிக்காத்தான் நேஷனல் (PN) 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, மொத்தம் 25 தொகுதிகளுடன் புதிய மாநில அரசாங்கத்தை அமைக்கின்றன.
பக்காத்தான் ஹராப்பான் வெறும் 11 இடங்களையே வென்றதால், டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருண் தலைமையிலான PH அரசாங்கத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், புதிய மந்திரி பெசார் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரண்மனைத் தரப்பிலிருந்து இன்றே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2018 பொது தேர்தலின் போது ஆட்சியைப் பறிகொடுத்த பாரிசான், 8 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நெகிரியில் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரவுள்ளது குறிப்பிடத்தக்கது.



