
கோலாலம்பூர், அக்டோபர் 29 – நெகிரி செம்பிலானில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில்,3 லட்சத்து 76 ஆயிரத்து 200 ரிங்கிட் மதிப்பிலான 376.2 கிலோகிராம் பாங்கோலின் செதில்களைப் போலீசார் பறிமுதல் செய்து, மூன்று உள்ளூர் ஆடவர்களைக் கைது செய்தனர்.
புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் வனவிலங்கு குற்றப் பிரிவு மற்றும் சிறப்பு விசாரணைப் பிரிவு, வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்காத் துறையான பெர்ஹிலித்தானுடன் இணைந்து, Operasi Bersepadu Khazanah நடவடிக்கையின் கீழ் இந்தச் சோதனையை மேற்கொண்டது.
இதன்போது, பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளிலிருந்து பெறப்படும் பொருட்களைச் சேமித்து விநியோகிப்பதுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஓர் இடத்தில், 15 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பாங்கோலின் செதில்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், ஒன்பது கைப்பேசிகள், ஒரு எடை இயந்திரம் மற்றும் ஒரு பூட்டும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களின் மொத்த மதிப்பு 4 லட்சத்து ஆயிரத்து 700 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
புக்கிட் அமான் வனவிலங்கு குற்றப் பிரிவின் தளபதி SAC டத்தோ முகமட் ஸாக்கி அஷார் (Mohd Zaki Ashar) கூறுகையில், கைது செய்யப்பட்ட மூவரும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் நீலாய் மாவட்டக் காவல்துறை தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல்நடவடிக்கைக்காக பெர்ஹிலித்தான் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்த வழக்கு, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
மேலும், இவ்வாண்டு ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 288 சோதனை நடவடிக்கைகளில், 471 பேர் கைது செய்யப்பட்டதுடன், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 350.35 மில்லியன் ரிங்கிட் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், Operasi Bersepadu Khazanah நடவடிக்கையின் கீழ் இவ்வாண்டு இதுவரை 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 74 பேர் கைது செய்யப்பட்டதுடன், 99.70 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



