Latestமலேசியா

நெகிரி செம்பிலான் தேர்தல்: PN 11 வேட்பாளர்கள் அறிவிப்பு; பாஸ், MIPP, வவாசான் சார்பில் 3 இந்தியர்கள் களமிறக்கம்

கோலாலம்பூர், ஜூலை-17-பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணி, ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது.

மொத்தமுள்ள 36 தொகுதிகளில் பாரிசான் நேஷனல் (BN) போட்டியிடாத 11 தொகுதிகளில் மட்டும் PN போட்டியிடுகிறது.

இதையடுத்து, பாரிசான் – பெரிக்காத்தான் இடையிலான ‘அதிகாரப்பூர்வமற்ற தேர்தல் ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது.

பெரிக்காத்தான் போட்டியிடும் 11 தொகுதிகளில் ஐந்தில் பாஸ் கட்சி போட்டியிடுகிறது.

இதனை பெரிக்காத்தான் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சம்சூரி மொக்தார் அறிவித்தார்.

அதில் குறிப்பிடத்தக்க வகையில், பாஸ் ஆதரவாளர் மன்றத்தைச் சேர்ந்த Dr குமார் பரமசிவம் லோபாக் (Lobak) தொகுதியில் போட்டியிடுகிறார்.

அண்மையில் தான் பெரிக்காத்தானில் இணைந்த டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் தலைமையிலான Parti Wawasan Negara கட்சி தனது முதல் தேர்தலில் 4 தொகுதிகளில் களமிறங்குகிறது.

அவற்றில், மூத்த அரசியல்வாதி தான் ஸ்ரீ ராய்ஸ் யாத்திமின் மகன் Danni Rais போட்டியிடும் Klawang தொகுதியும் அடங்கும்.

மலாக்கா முன்னாள் போலீஸ் துணைத் தலைவர் Razali Abu Samah-வை Wawasan சிக்காமாட் (Sikamat) தொகுதியில் களமிறக்குகிறது.

Wawasan சார்பில் Erik Micheal என்ற இந்திய வேட்பாளர் மம்பாவ் (Mambau) தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவ்வேளையில் MIPP எனப்படும் மலேசிய இந்திய மக்கள் கட்சிக்கும், கெராக்கானுக்கும் தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

MIPP சார்பில் N. சத்தேஸ் குமார் லுக்குட்டில் (Lukut) போட்டியிடுகிறார்.

​PN போட்டியிடும் 11 தொகுதிகளில், 7 தொகுதிகள் 2023 மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் (PH) வசமிருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிக்காத்தானின் மற்றோர் உறுப்புக் கட்சியான பெர்சாத்து, பாஸ் தலைமைத்துவத்தின் மீது கொண்ட அதிருப்தியால் அனைத்து 36 தொகுதிகளிலும் சொந்த சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதும் இங்கு கவனிக்கத்தக்கது.

எது எப்படி இருப்பினும், பக்காத்தானை வீழ்த்தும் முயற்சியில் பாரிசானும் பெரிக்காத்தானும் கைக்கோர்த்திருப்பது தேர்தல் முடிவுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!