
ஈப்போ, ஆகஸ்ட்-06-பேராக், ஈப்போவில் Tanjung Rambutanனில் உள்ள பராமரிப்பு மையமொன்றில் அண்மையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட ஆடவர் நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறை நம்புகிறது.
தலைப் பகுதியில் கடுமையாகத் தாக்கப்பட்டதே அவரது மரணத்திற்குக் காரணம் என்பதை Raja Permaisuri Bainun மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்தியிருப்பதாக பேராக் மாநிலக் காவல் துறைத் தலைவர் Datuk Mohd Alwi Zainal Abidin தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி பராமரிப்பு மையத்தில் ஆக்ரோஷமாக நடந்து மற்றவர்களுக்கு இடையூறு விளைவித்ததைத் தொடர்ந்து அச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணைகள் காட்டுகின்றன.
அவரைக் கட்டிப் போடுமாறு பராமரிப்பாளர் ஒருவர் உத்தரவிட்டதாகவும், அதன் பிறகு அந்நபரும் அங்கு தங்கியிருந்த மேலும் சிலரும் சேர்ந்து அவரை அடித்து மிதித்ததாகவும் கூறப்படுகிறது. அதன் தொடர்பில் பராமரிப்பாளர் உட்பட ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 5 முதல் 8 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அச்சம்பவம் குறித்து தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வேளையில் சம்பந்தப்பட்ட பராமரிப்பு மையம் சமூக நலத் துறையிலோ மலேசிய சுகாதார அமைச்சிலோ பதிவு செய்யப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அது குறித்தும் முழுமையான விசாரணை நடைபெறுவதாக Mohd Alwi மேலும் கூறினார்.



