
பள்ளி மண்டலப் பகுதிகளில் மணிக்கு 30 கிலோமீட்டர் மட்டுமே வேகக் கட்டுப்பாடு – போக்குவரத்து அமைச்சு மறுபரிசீலனை
கோலாலம்பூர், பிப்ரவரி 24-
பள்ளி மண்டலங்களில் மணிக்கு 30 கிலோமீட்டர் வேக வரம்பை வழங்குவதற்காக, 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் (சட்டம் 333) கீழ் விதிகளில் திருத்தங்களை செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு மறுபரிசீலனை செய்து வருகிறது.
சாலைப் பாதுகாப்பு மற்றும் நெரிசல் தொடர்பான அமைச்சரவைக் குழு மூலம், மாணவர்கள், பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, தேசியக் கொள்கையாக, பள்ளி மண்டலங்களில் அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தை நிர்ணயிக்க அரசாங்கம் முன்னர் ஒப்புக்கொண்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
பொதுப்பணி அமைச்சு, பொதுப்பணித் துறை, வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு ,போலீஸ்,கல்வி அமைச்சு, மலேசிய சாலை பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சுகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் ஒத்துழைப்போடு இந்த திருத்தம் விரிவாக செயல்படுத்தப்படும்.
இந்த சட்டம் அரசாங்க பதிவேட்டில் இடம்பெற்றவுடன் அதன் அமலாக்கம் தொடர்பாக போலீஸ் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை சட்டம் 333 இன் தற்போதைய விதிகளின்படி சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று அந்தோனி லோக் நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் சுட்டிக்காட்டினார்.
அதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிப் பகுதிகளில் ஒருங்கிணைந்த செயல் நடவடிக்கை மற்றும் தெளிவான சாலை அடையாளங்களை நிறுவுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய அணுகுமுறையின் மூலம் இதன் அமலாக்கம் இருக்கும்.



