
குவாந்தான், செப்டம்பர்-27,பஹாங்கில் 50 வயது பெண் விவசாயி ஒருவர், Love Scam மற்றும் போலி தங்க முதலீட்டு மோசடியில் சிக்கி 1.15 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஜூலை மாதம் வாட்சப் வழியாக, இணையப் பாதுகாப்பு ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநர் என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவருடன் பழகியுள்ளார் என பஹாங் போலீஸ் கூறியது.
அதிக இலாபம் தருவதாகக் கூறி தொடங்கப்பட்ட போலி தங்க முதலீட்டுத் திட்டம் மற்றும் Veniec Lottery தளத்தின் மூலம், 7 வங்கிக் கணக்குகளுக்குத் தனது சேமிப்பு மற்றும் குடும்பத்தினரிடம் வாங்கியக் கடனை அப்பெண் மாற்றியுள்ளார்.
சொன்னபடி கமிஷன் வராத போதே, தாம் மோசடிக்கு ஆளானதை உணர்ந்து அவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
எனவே, பொது மக்கள் சந்தேகத்திற்குரிய வங்கிக் கணக்குகள் குறித்து Semak Mule தளம் வாயிலாகச் சரிபார்க்குமாறும், சந்தேகம் எழுந்தால் 997 என்ற தேசிய மோசடி தடுப்பு மையத்தை (NSRC) உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறும் போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.



