
80 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலிங் ,பெலாம் தோட்ட ஸ்ரீ ஸ்ரீ நோக்கலம்மன் ஆலய கும்பாபிஷேகம் ஆகம முறைகள்படி நம் நாட்டின் புகழ்பெற்ற குருக்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த குருக்கள் முன்னிலையில் இம்மாதம் 12ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
உள்ளூர் வெளியூரிலிருந்தும் சுமார் 3000 பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
பெலாம் தோட்ட ஶ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலயத்தின் அருகே பழைய ஆலயத்துக்கு பதிலாக தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட மாற்று நிலத்தில் திருப்பணி வேலைகள் சிறந்த முறையில் செய்யப்பட்டு இறுதியில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆலய ஸ்தாபகர் தலைவர் தர்மகர்த்தாவும் இங்குள்ள தமிழ்ப்பள்ளியின் ஆலோசகருமான வர்த்தகர் ஏ சூரியதேமுடூ முயற்சியால் சுமார் 3 லட்சம் வெள்ளி செலவில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.
தோட்டத்திலும் சுற்று வட்டாரத்திலும் அதிகமான தெலுங்கு வம்சாவளியினர் இங்கு வாழ்ந்து வருவதால் அவர்களின் குலதெய்வமாக ஸ்ரீ ஸ்ரீ நோக்கலம்மன் ஆலயம் விளங்கி வருகிறது.
இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் நன்கொடை உதவி வழங்கிய அனைவருக்கும் ஆலய ஸதாபாகர் சூரியதேமுடூவின் மகன் லோகேஷ் ராவ் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
ஆலயங்களும் தமிழ்ப்பள்ளிகளும் இந்திய சமூகத்தின் அடையாளமாக திகழ்வதால் அவற்றை தொடர்ந்து பாதுகாக்கப்பதற்காக இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து பராமரிக்க வேண்டும் என லோகேஸ் ராவ் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே 80 ஆண்டு கால வரலாற்று பெருமை வாய்ந்த இந்த ஆலயம் தற்போது புதிய இடத்தில் உருவாகுவதற்கு தோட்ட நிர்வாகம் நிலத்தை கொடுத்து உதவியதற்காக கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்ட பலர் தோட்ட நிர்வாகத்திற்கும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.



