
ஹோங் கோங், அக்டோபர்-25,பினாங்கிலிருந்து ஹோங் கோங் அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்த 25 வயது சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து 2 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமையன்று ஹோங் கோங் விமான நிலையத்தில் சந்தேக நபரின் பயணப் பைகளைச் சோதனையிட்டபோது, சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் கண்டறியப்பட்டதாக, அந்நாட்டின் சுங்க இலாகா தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் விநியோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட அவ்வாடவர், அங்குள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
ஹோங் கோங் சட்டப்படி இக்குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், 5 மில்லியன் ஹோங் கோங் டாலர் அதாவது 2.6 மில்லியன் ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மலேசிய வான்வெளி வழியே வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அண்மையக் காலமாக அதிகரித்து வரும் நிலையில், இச்சம்பவம் பதிவாகியுள்ளது.



