
புக்கிட் மெர்தாஜாம், செப்டம்பர் 11 — பினாங்கில் கட்டுமானத் தளத்தில் சாரக்கட்டை அதாவது மர அமைப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர், சாரக்கட்டிற்கு ஆதரவாக அமைக்கப்பட்ட தற்காலிகத் தளம் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.
செப்டம்பர் 8ஆம் தேதி மாலை 6.15 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், கட்டிடத்தின் எட்டாவது மாடியில் சாரக்கட்டை அகற்றிக்கொண்டிருந்தபோது சாரக்கட்டோடு சேர்ந்து தொழிலாளியும் கீழ்தளத்தில் விழுந்துள்ளார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பினாங்கு தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையான DOSH தெரிவித்தது.
முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, சம்பவ இடத்தைப் பாதுகாக்கும் வகையில் தொடர்புடைய பணிகளை நிறுத்த DOSH உத்தரவிட்டது. தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
உயரமான இடங்களில், குறிப்பாக சாரக்கட்டு அமைக்கும் மற்றும் அகற்றும் பணிகளில், உரிய இடர் மதிப்பீடுகள், பாதுகாப்பான அணுகல் மற்றும் விழுவதைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்புகள் உறுதிசெய்யப்பட வேண்டுமென DOSH வலியுறுத்தியுள்ளது.



