
கோலாலாம்பூர், ஏப்ரல்-23-கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள KL Sentral Monorel நிலையத்திற்கு கீழ், பார்வை குறைபாடுடையோருக்கான பிரத்யேக நடைபாதை மோட்டார் சைக்கிள்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற வணக்கம் மலேசியா குழுவினர், அங்குள்ள அவல நிலையைப் பதிவுச் செய்தனர்.
நீண்ட நாட்களாகத் தொடரும் இந்தப் பிரச்சனை குறித்துப் பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்தியப் பார்வை குறைபாடுடையோர் நலச் சங்கத்தின் தலைவர் சரவணன் வேலாயுதன், “கண்பார்வையற்றோர் நடைபாதையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கடைகள் இருப்பது எங்களின் நடமாட்டத்திற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
அச்சங்கத்தின் பொருளாளர் எஸ். மோகன ராணி சந்திராராஜு பேசுகையில், பாதுகாப்புப் பிரச்சனைகள் மற்றும் விபத்து அபாயம் அதிகமிருப்பதாகக் கவலை தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பொது மக்களில் ஒருவரான ஜெயபெருபா கிருஷ்ணன், இத்தகைய மோட்டார் சைக்கிள்களில் மோதி தாம் பலமுறை காயமடைந்துள்ளதாகக் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டார்.
எனவே, இந்த நடைபாதையை உடனடியாகச் சுத்தப்படுத்தவும், சட்டவிரோத மோட்டார் சைக்கிள் நிறுத்தத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் DBKL மற்றும் போலீஸாருக்குப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கான திட்டங்கள் மற்றும் வசதிகள் எளிமையாக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வெளியிடப்பட்டது.



