
புத்ராஜெயா, ஏப்ரல்-20-மலேசியாவின் நூல் வெளியீடு மற்றும் பதிப்பகத் துறை தற்போது மிகவும் சுறுசுறுப்பான மற்றும் ஆக்கப்பூர்வமான நிலையை எட்டியுள்ளதாக, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு கூறியுள்ளது.
நாட்டின் நூல் வெளியீட்டுச் சூழல் வலுவாக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்துலகத் தரத்திலான நூல் பதிப்பு எண்கள் ISBN அதிக அளவில் பதிவுச் செய்யப்பட்டுள்ளதை அமைச்சு சுட்டிக் காட்டியது.
கடந்தாண்டில் 23,485 ISBN எண்களும், 304 ISSN எண்களும் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
இது அதற்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கையைப் போலவே சீரான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
பொது வாசிப்பு மற்றும் அறிவியல் ரீதியான படைப்புகளுக்கான தேவை மக்களிடையே அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் என, அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் தெரிவித்தார்.
இந்த நேர்மறையான வளர்ச்சி 2030-ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை ஒரு ‘வாசிக்கும் நாடாக’ மாற்றும் அரசாங்கத்தின் இலக்கை வலுப்படுத்துகிறது என்றார் அவர்.
இந்நிலையில், எழுத்தாளர்கள், பதிப்பகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து வாசிப்பு கலாச்சாரத்தை வளர்க்க ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக ஏரன் சொன்னார்.



