Latestமலேசியா

டிஜிட்டல் முதிர்ச்சி இலக்கு: சமூக ஊடகங்களுக்கு 16 வயது கட்டுப்பாட்டின் பின்னணி என்ன?

கோலாலம்பூர், ஏப்ரல்-19-மலேசியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சுயமாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது தெரிந்ததே.

ஆனால், ஏன் இந்த வயது வரம்பு?

வாருங்கள் ஆராய்வோம்….

இந்தத் திட்டம் ஒரு முழுமையான தடையல்ல, மாறாக சமூக ஊடகத்தை சொந்தமாகப் பயன்படுத்துவதைத் தள்ளிப்போடும் ஒரு நடவடிக்கையே என நிபுணர்கள் கூறுகின்றனர்.

16 வயதில் தான் ஒருவருக்குச் சரியான முடிவுகளை எடுக்கும் ‘அறிவாற்றல் முதிர்ச்சி’ கிடைப்பதாக, தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கமான NUTP-யின் பொதுச் செயலாளர் Fouzi Singon கூறுகிறார்.

16 வயதுக்குக் குறைவான சிறார்கள் இணையத்தில் பார்க்கும் அனைத்தையும் அப்படியே நம்பும் பழக்கத்தைக் கொண்டவர்கள்.

இதனால் அவர்கள் தவறான வழிகாட்டுதல்கள் மற்றும் இணையப் பகடிவதைக்கு ஆளாகும் அபாயம் அதிகமுள்ளது.

எனவே இந்த வயது கட்டுப்பாடானது அவர்களின் வளர்ச்சிக் காலத்தில் ஒரு பாதுகாப்புக் கவசமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், வெறும் வயது வரம்பு மட்டுமே இதற்குத் தீர்வாகாது என குழந்தைகள் நல ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

பெற்றோரின் கண்காணிப்பு எப்போதும் சாத்தியமில்லை என்பதால், இணையத் தளங்களின் பாதுகாப்பான வடிவமைப்பு மற்றும் பள்ளிகளில் ‘டிஜிட்டல் அறிவு’ புகட்டப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆஸ்திரேலியாவைப் பின்பற்றி எடுக்கப்படும் இந்த வயது வரம்பு நடவடிக்கை, இளைய தலைமுறையைப் பாதுகாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டிஜிட்டல் உலகில் பாதுகாப்பு என்பது வெறும் வயதில் மட்டுமல்ல, விழிப்புணர்விலும் உள்ளது என்பதே பொதுவான கருத்தாகும்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!