
கோலாலம்பூர், அக்டோபர் 1 – கோலாலம்பூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் உரிமம் இல்லாத விளம்பரப் பலகைகளுக்கு எதிராக DBKL நேற்று நடவடிக்கை மேற்கொண்டது.
புக்கிட் பிந்தாங், ஜாலான் பெடாரா (Jalan Bedara, Bukit Bintang) பகுதியிலுள்ள ஹோட்டல் முன்புற வாகன நிறுத்துமிடத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த உணவகக் கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. ஏற்கெனவே வழங்கப்பட்ட உத்தரவுகளை அதன் உரிமையாளர் பின்பற்றாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், ஜாலான் பெடாரா மற்றும் ஜாலான் அங்சோகா (Jalan Angsoka) பகுதிகளில் அனுமதியின்றி கட்டிடங்களை விரிவுபடுத்தியவர்களுக்கு 24 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
இதனிடையே, புடு மற்றும் டேசா துன் ரசாக் பகுதிகளில் உரிமம் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளும் அகற்றப்பட்டன. விதிமுறைகளை மீறும் கட்டிட உரிமையாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமென DBKL தெரிவித்துள்ளது.



