
ஜோர்ஜ்டவுன், மார்ச்-4,தவறான தகவல்கள் அல்லது சினமூட்டும் பதிவுகளைப் பொது மக்கள் பகிரக் கூடாது; அதே சமயம் பொது அமைதியை சீர்குலைக்கக் கூடிய பேரணிகளிலோ ஒன்றுகூடல்களிலோ பங்கேற்கக் கூடாது என்றும் பினாங்கு போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.
மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிசீ இஸ்மாயில் எச்சரித்தார்.
புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு வெளியே உள்ள ஒரு சிறிய இந்துக் கோயிலுக்கு எதிராக வரும் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகக் கூறி வெளியிடப்பட்ட ஃபேஸ்புக் பதிவு தொடர்பில், அவர் கருத்துரைத்தார்.
சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் வெளியிட்ட அப்பதிவுக்கு எதிராக, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் நேற்று கொடுத்த போலீஸ் புகாரின் அடிப்படையில் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட கோயிலுக்கு எதிராக சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பேரணி நடத்த சம்ரி ஆள்சேர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அப்பதிவுக்கு எதிராக, குற்றவியல் சட்டம் மற்றும் தொடர்பு-பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுவதாக அசிசீ சொன்னார்.
போலீஸின் இந்த அறிக்கையை, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் என்ற முறையில் தாம் வரவேற்பதாக ராயர் தெரிவித்துள்ளார்.
மாநிலத்திலுள்ள இந்து ஆலயங்களைக் காக்கும் கடப்பாடு தங்களுக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.



