Latestமலேசியா

புதிய தலைமுறை MyKad-ஐ உதவித்தொகை மற்றும் மானியப் பரிவர்த்தனைகளுக்குத் தொடர்ந்து பயன்படுத்தலாம் – தேசிய பதிவுத்துறை

புத்ராஜெயா, செப்-17-புதிய தலைமுறை MyKadட்டை மலேசியர்கள் அதிகாரப்பூர்வ அடையாள ஆவணமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதுடன், அரசு உதவிகள் மற்றும் மானியங்களைப் பெறுவதற்கான பரிவர்த்தனைகளுக்கும் உபயோகிக்கலாம். தேசியப் பதிவுத் துறை JPN அவ்வாறு தெரிவித்திருக்கிறது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தகுதி விதிமுறைகளுக்கு உட்பட்டு, MyKad மூலம் சரிபார்ப்பு மற்றும் அரசு உதவிகளைப் பெறும் நடைமுறைகள் தொடர்ந்து செயல்படும். புதிய தலைமுறை MyKad அறிமுகப்படுத்தப்படுவதால் அரசு உதவிகள் அல்லது மானியங்கள் நிறுத்தப்படும் என பொதுமக்கள் ஒருபோதும் கவலைப்படத் தேவையில்லை என JPNனின் அடையாள அட்டைப் பிரிவு இயக்குநர் Muhammad Asraf Sukardi கூறினார்.

மேலும், புதிய தலைமுறை MyKad-க்கு மாறுவதால் SARA உதவித் திட்டத்தின் மீதமுள்ள தொகையை அல்லது தகுதியை இழக்க நேரிடாது. SARA தொடர்பான தகவல்கள் MyKad-ல் சேமிக்கப்படாமல், SARA முறையில் பதிவு செய்யப்படுகிறது. எனவே MyKad பயனீட்டாளர்களை அடையாளம் காணவும் அங்கீகரிக்கப்பட்ட கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும் ஒரு கருவியாக மட்டுமே செயல்படுகிறது என அவர் விளக்கினார்.

தற்போதைய MyKad சேதமடையாத நிலையில் அதனை மாற்ற வேண்டிய அவசியமில்லை. எனினும் பிளாஸ்டிக் அடையாள அட்டை, உயர்தர அடையாள அட்டை மற்றும் ‘ghost image’ இல்லாத பழைய MyKad வைத்திருப்பவர்கள் புதிய தலைமுறை MyKadட்டை எடுக்க மாற வேண்டும்.

புதிய தலைமுறை MyKad-ஐ அதே நாளில் தயாரித்து வழங்கும் 40 JPN கிளைகளில் அட்டை விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது. அச்சிடும் வசதி இல்லாத JPN கிளைகளிலும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். அதற்கு ஐந்து வேலை நாட்கள் வரை ஆகும். புதிய தலைமுறை MyKad-ல் Dynamic Security Hologram, ஒளிபுகும் சாளரம், Enforcement QR Code மற்றும் dual-interface chip உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!