
பூச்சோங், ஜூலை-22 – சிலாங்கூர், பண்டார் புத்ரி பூச்சோங்கில் உள்ள கொலம்பியா ஆசியா மருத்துவமனைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தியே என, போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்று பிற்பகல் 2.54 மணியளவில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மர்ம நபர் ஒருவர் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸாரின் வெடிகுண்டு நிபுணர் பிரிவு மற்றும் மோப்ப நாய் படையான K9 ஆகியவை மருத்துவமனை வளாகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டன.
சோதனையின் முடிவில், அங்கு சந்தேகத்திற்கிடமான வெடிமருந்துகளோ அல்லது ஆபத்தான பொருட்களோ எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்று செர்டாங் போலீஸ் கூறியது.
இதையடுத்து, இந்தச் சம்பவம் வெறும் புரளி மற்றும் அவதூறு மிரட்டல் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகப் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் anonymous எனப்படும் அடையாளம் தெரியாத தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்த குற்றத்திற்காகச் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் 2 தனியார் பல்கலைக்கழகங்கள் இதேபோன்று பொய்யான வெடிகுண்டு மிரட்டல்களால் மூடப்பட்டு, பின்னர் வதந்தி எனத் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.



