
பூச்சோங், மே-14-சிலாங்கூர் பூச்சோங்கில் குடிநுழைவுத் துறை நடத்திய அதிரடிச் சோதனையில் 74 வெளிநாட்டினர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குடியேறிகள் மற்றும் சட்டவிரோதத் தொழிலாளர்கள் குறித்த புகார்களைத் தொடர்ந்து சிலாங்கூர் குடிநுழைவுத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
உணவுக் கடைகள், முடி திருத்தும் நிலையங்கள், மளிகைக் கடைகள், சலவைக் கடைகள், பேரங்காடிகள் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் போது 100-க்கும் மேற்பட்டோர் பரிசோதிக்கப்பட்டனர்.
அவர்களில் முறையான பயண ஆவணங்கள் இல்லாதது, விசா காலம் முடிந்தும் தங்கியிருந்தது போன்ற குற்றங்களுக்காக மியன்மார், வங்காளதேசம் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 74 பேர் கைதாகினர்.
சட்டவிரோதத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் அல்லது அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் உள்ளூர் முதலாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட சில வணிக நிறுவன உரிமையாளர்கள் மீது தற்போது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் அனைவரும் மேல் விசாரணைக்காக செமஞே குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.



