
கோலாலம்பூர், அக்- 20-மலேசிய சங்கங்களின் பதிவுத்துறையான RoS, பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் பதிவை ரத்து செய்துள்ளது. பதிவான ரத்து செய்ய வேண்டாம் எனக் கோரி அந்தக் கூட்டணி அளித்த விளக்கங்கள் போதுமானதாக இல்லை என்பதால் அம்முடிவு எடுக்கப்பட்டது.
அக்டோபர் 12ஆம் தேதி பெரிகாத்தான் நேஷனல் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் விளக்கங்களை விரிவாக ஆய்வு செய்த பின், 1966ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டத்தின் பிரிவு 13(1)(c)(iv)-இன் கீழ் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அது விளக்கியது. பதிவு குறித்து எழுப்பப்பட்ட விவகாரங்கள் தொடர்பில் விளக்கமளிக்கக் அக்கூட்டணிக்கு செப்டம்பர் 22ஆம் தேதி அனுப்பப்பட்ட அறிவிப்பின் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் விளக்கங்களையும் பரிசீலித்ததில், கூட்டணி வழங்கிய காரணங்கள் பதிவை ரத்து செய்வதற்கான அடிப்படைகளை மறுக்கப் போதுமானதாக இல்லை. அதன் பதிவை நிலைநிறுத்துவதற்கான வலுவான நியாயத்தையும் முன்வைக்கவில்லை என RoS குறிப்பிட்டது.
Bersatu கட்சி அளித்த புகார்களைத் தொடர்ந்து, செப்டம்பர் 24ஆம் தேதி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் செப்டம்பர் 23 முதல் இடைநிறுத்தப்பட்டன. 1966ஆம் ஆண்டு சங்கங்கள் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ், விளக்கமளிக்கக் கூட்டணிக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இவ்வேளையில், RoS வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து, அக்டோபர் 5ஆம் தேதி பெரிகாத்தான் நேஷனல் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நீதித்துறை மறுஆய்வு கோரி மனுத் தாக்கல் செய்தது. அக்டோபர் 13ஆம் தேதி, RoS வெளியிட்ட இரண்டு அறிவிப்புகளை எதிர்த்து நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.



