
புத்ராஜெயா, ஜூலை-10 – வேலை நேரத்திற்கு அப்பாற்பட்ட விபத்துகளுக்கான காப்பீட்டுத் திட்டமான LINDUNG 24 Jam திட்டத்திலிருந்து விலகிக் கொள்வதற்கான (Opt-Out) இணையப் பக்கம் வரும் திங்கட்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வரும் என, சமூகப் பாதுகாப்பு நிறுவனமான பெர்கேசோ (PERKESO) அறிவித்துள்ளது.
உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டம் கட்டாயமில்லை என்ற அமைச்சரவையின் புதிய கொள்கை மாற்றத்தைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இத்திட்டம் தொடர்ந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த காப்பீட்டுத் திட்டத்திலிருந்து விலக விரும்பும் உள்நாட்டுப் பங்களிப்பாளர்கள், எதிர்காலத்தில் சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க பொறுப்புத் துறப்பு (Release of Liability) படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என பெர்கேசோ சுட்டிக் காட்டியுள்ளது.
இது குறித்து பேசிய பெர்கேசோ குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ Dr. Mohammed Azman Aziz Mohammed, இத்திட்டம் அமுல்படுத்தப்பட்ட முதல் ஒரு மாதத்தில் மட்டும் தினசரி சராசரியாக 27 விபத்து வழக்குகள் பதியப்பட்டு, ஏறக்குறைய 2 மில்லியன் ரிங்கிட் உதவித்தொகை விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வேலை நேரத்திற்கு வெளியே எதிர்பாராமல் நடக்கும் விபத்துகளிலிருந்து குடும்பப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, உள்நாட்டுத் தொழிலாளர்கள் தொடர்ந்து இதில் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த புதிய கொள்கை மாற்றத்தால் நிதி நிலைத்தன்மைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை மதிப்பிடுவதற்காக, மனிதவள அமைச்சுடன் இணைந்து இவ்வாண்டு இறுதிக்குள் இத்திட்டத்தின் செயல்பாட்டு முறைகள் குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்றும் இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் சொன்னார்.



