
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-9 – பினாங்கில், வாகனங்களின் பதிவு எண்களைத் தானியக்கமாகக் கண்டறிந்து உடனடி அபராதம் விதிக்கும் A-N-P-R வாகன நிறுத்துமிடக் கண்காணிப்பு முறையை உடனடியாக நிறுத்தி வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது மக்களின் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து, இந்த முறையைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு பினாங்கு மாநகர மன்றம் மற்றும் செபராங் பிறை மாநகர மன்றங்களுக்கு முதல்வர் சௌ கோன் யோ (Chow Kon Yeow) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பயன்பாட்டில் உள்ள இந்த முறையின் மூலம், மாதம் ஒன்றுக்கு சுமார் 7,000 முதல் 10,000 வரை அபராதங்கள் விதிக்கப்பட்டு வந்தன.
என்றாலும், சாலைப் போக்குவரத்துத் துறையின் தரவுத்தளத்தைக் கொண்டு, செலுத்தப்படாத வாகன நிறுத்துமிடக் கட்டணங்களுக்கு உடனுக்குடன் டிஜிட்டல் முறையில் அபராதம் விதிக்கப்பட்டது பொது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மாநில DAP தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ANPR முறை மீண்டும் முழுமையான மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.



