புத்ராஜெயா, ஆகஸ்ட்-9, மக்களுக்குக் கெடுதலைக் கொண்டு வரக்கூடிய பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இணையத் தளங்களை மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையம் (MCMC) முடக்கியுள்ளது.
பல்வேறு சட்ட மீறல்களுக்காக, 2022 ஜனவரி முதல் கடந்த ஆகஸ்ட் 1 வரை அவை முடக்கப்பட்டன.
அவற்றில் சுமார் 96 விழுக்காடு, இணையச் சூதாட்டம், இணையக் காப்புரிமை மீறல், இணைய மோசடி, முதலீட்டு மோசடி, இணைய விபச்சாரம் என 5 முதன்மைப் பிரிவுகளின் கீழ் வருபவையாகும்.
போலீஸ், உள்நாட்டு வாணிபம்-வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN), பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்டவற்றின் ஒத்துழைப்போடு அந்த இணையத் தளங்களைக் கண்டறிந்து முடக்கியதாக MCMC அறிக்கையொன்றில் கூறியது.
அவற்றை முடக்கியதன் வாயிலாக ஆள் கடத்தல், சிறார் விற்பனை, போதைப்பொருள் போன்ற தடைச் செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை உள்ளிட்ட மற்ற குற்றங்களையும் ஒடுக்க முடிந்திருப்பதாக அவ்வாணையம் விளக்கியது.
சிறியவரிலிருந்து பெரியோர் வரை அனைத்து சாராருக்கும் ஒரு பாதுகாப்பான இடமாக இணையம் விளங்குவதை உறுதிச் செய்ய சேவை வழங்குநர்களுடனும் MCMC அணுக்கமான ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகிறது.