
புத்ராஜெயா, ஜூலை-1-மலேசியத் தந்தைக்கும் தாய்லாந்து தாய்க்கும் பிறந்த 25 வயது ஹரிஹரன் முகுந்தன் என்பவரின் குடியுரிமை மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒருமனதாகத் தள்ளுபடி செய்துள்ளது.
அவர் பேராக்கில் பிறந்து, கடந்த காலங்களில் மலேசியக் கடப்பிதழ் மற்றும் MyKid அட்டை பெற்றிருந்தபோதிலும், அவை மட்டுமே குடியுரிமைக்கான சட்டப்பூர்வ ஆதாரமாகாது என நீதிமன்றம் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.
இதற்கு முன்னர், கால்பந்து வீரர்கள் இந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றது மற்றும் பஹாங்கில் பிறந்த Azimah Hamzah ஆகிய பிற உதாரணங்களையும் ஹரிஹரன் தனது வழக்கில் சுட்டிக்காட்டியிருந்தார்.
அகதிகளாக வந்த Azimah-வின் பெற்றோர் பின்னர் மலேசியக் குடியுரிமை பெற்ற நிலையில், 38 வயதான Azimah-வும் தீவிர முயற்சிக்குப் பிறகு முறைப்படியான மலேசியக் குடியுரிமையைப் பெற்றார்.
அத்துடன், கிள்ளானில் பிறந்த Nalvin Dhillon வழக்கையும் ஹரிஹரன் சுட்டிக்காட்டினார்.
நால்வின் பிறந்தபோது, அவரது மலேசியத் தந்தையும் மலேசியரல்லாத தாயும் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொண்டிருக்கவில்லை.
பின்னர் அவருக்கும் குடியுரிமை வழங்கப்பட்டதை, ஒரு முன்மாதிரியாக நீதிமன்றத்தில் ஹரிஹாரன் சுட்டிக் காட்டியிருந்தார்.
ஆனால், அவரது பிறப்பின் போது பெற்றோருக்கு சட்டப்பூர்வமாகத் திருமணம் நடைபெறாததால், கூட்டரசு அரசியலமைப்பின்படி அவர் தாயாரின் குடியுரிமையையே பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
எனினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக ஹரிஹரனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.



