
மலாக்கா, அக்டோபர்-25,மலேசியாவின் தொழில்நுட்பத் துறையில் 50 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது சுமார் 204 பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்ய அனைத்துலக முதலீட்டாளர் ஒருவர் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
AI, வளர்ந்து வரும் புதியத் தொழில்நுட்பங்கள் மற்றும் தரவு மையங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளது.
சரவாக்கின் கூச்சிங் மற்றும் தீபகற்ப மலேசியாவில் முதலீடுகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அண்மையில் நடைபெற்ற வீடியோ சந்திப்பின்போது சம்பந்தப்பட்ட முதலீட்டாளர் இதனைத் தெரிவித்ததாகவும் அன்வார் கூறினார்.
இந்த முதலீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள அரசியல் நிலைத்தன்மை, இன நல்லிணக்கம் மற்றும் சாதகமான முதலீட்டுச் சூழல் அவசியம் என பிரதமர் வலியுறுத்தினார்.
மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தர உயர்வுக்கும் சிறந்த வேலைவாய்ப்புகளுக்கும் வழிவகுக்க வேண்டும் என்றார் அவர்.



