
ஜோகூர் பாரு, அக்டோபர்-24,ஜோகூர் மாநிலத்தில் கபடி விளையாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், கஹாங் சட்டமன்ற உறுப்பினர் V. ருகேந்திரன் ஜோகூர் மாநிலக் கபடி சங்கத்தின் புதிய புரவலராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தம்போயில் அடையார் ஆனந்த பவன் உணவகத்தில் நடைபெற்ற சிறப்புச் சந்திப்பில், சங்கத்தின் தலைவர் M. சந்திரனுடன் இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ருகேந்திரன், பாசீர் கூடாங் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கிடையிலான கபடிப் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான முழு ஆதரவையும் மாநிலக் கல்வி இலாகா வாயிலாக வழங்க உறுதியளித்தார்.
இந்நிகழ்வில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு தடைகளைக் கடந்து எண்ணற்ற மாணவர்களைத் தேசிய மற்றும் பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு வீரர்களாக உருவாக்கிய ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் மற்றும் நுட்பக்குழு அதிகாரிகளின் சேவையைப் பாராட்டிச் சிறப்புக் கௌரவமும் வழங்கப்பட்டது.
கல்வி மற்றும் தகவல் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழுவின் துணை உறுப்பினருமான புதிய புரவலரின் வருகை, ஜோகூர் மாநிலக் கபடி விளையாட்டின் எதிர்காலத்திற்கு மேலும் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



