
ஷா ஆலாம், அக்டோபர்-24,சிலாங்கூரின் உண்மையான பலம் அதன் பொருளாதார வளர்ச்சியில் மட்டுமல்ல, மாறாக அங்கு வாழும் மக்களிடமே இருப்பதாக மாநில சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா தெரிவித்துள்ளார்.
சிலாங்கூர் சுல்தானாக அரியணை ஏறி 25-ஆவது வெள்ளி விழா ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு தேசியச் செய்தி நிறுவனமான பெர்னாமாவுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் நாட்டின் முக்கிய பொருளாதார மையமாக உருவெடுத்ததற்கு, மாநில மக்களும் பிற மாநிலங்களிலிருந்து வந்து அங்கு பணிபுரிவோரும்தான் முக்கியக் காரணம் என சுல்தான் சுட்டிக்காட்டினார்.
அதே சமயம், மாநிலத்தில் வெள்ளப் பிரச்சனை, முறையற்ற குப்பை அகற்றுதல் மற்றும் தூய்மையின்மை போன்ற அடிப்படைப் பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படாதது தமக்கு அதிருப்தியளிப்பதாக அவர் வெளிப்படையாகவே தெரிவித்தார்.
இந்நிலையில், பொது மக்கள் தமக்கு அனுப்பும் புகார்களை உடனுக்குடன் மந்திரி பெசார் அலுவலகத்திற்கு தாம் அனுப்பி வருவதாகவும் அவர் கூறினார்.
பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் புள்ளிவிவரங்களால் மட்டும் அளவிடப்படக்கூடாது; மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் நல்வாழ்வின் அடிப்படையிலேயே மதிப்பிடப்பட வேண்டும் என்றும் சுல்தான் ஷராஃபுடின் வலியுறுத்தினார்.
மக்கள் நலனை முன்னிறுத்தியும், அடிப்படைச் சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு காணும் வகையிலும் மாநிலத்தின் நிர்வாகம் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் அவர் வெளியிட்டார்.
சுல்தான் ஷராஃபுடின், 2001-ஆம் ஆண்டு தமது தந்தையாரின் மறைவுக்குப் பிறகு சிலாங்கூரின் 9-ஆவது சுல்தானாகப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.



