
கோலாலம்பூர், அக்டோபர்-24,மலேசியாவில் Waze வழிகாட்டிச் செயலிக்கு முழுத் தடை விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
தேசியப் பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாற்றுச் செயலிகள் தயாரானால் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டியுள்ளார்.
அரசாங்க ஊழியர்கள் Waze செயலியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ள போதிலும், தேசியப் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
மலேசியாவுக்கு எதிராக இஸ்ரேல் விரைவில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தக்கூடும்…
_“இஸ்ரேலின் கொடூரமான சியோனிச ஆட்சியைத் தீவிரமாக எதிர்க்கும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று. நமது நடவடிக்கைகள் நிச்சயமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்குப் பிறகு, நம்மைத் தாக்குவதற்கு அவர்கள் தங்களின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்”_ என அன்வார் கூறினார்.
இதனிடையே, உள்ளூர் வழிகாட்டிச் செயலியான TuJu-வில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறுகள் 2 வாரங்களுக்குள் சரிசெய்யப்படும் என அதன் சேவை வழங்குநர் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
Waze-க்கு மாற்றாக உள்ளூர் செயலியைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில், அதன் செயல்திறனை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருவதாக அறிக்கை வாயிலாக, Prosignal Consortium Sdn Bhd கூறியது.
நிலைமை இவ்வாறிருக்க, தரவுப் பாதுகாப்பு தொடர்பான மலேசியாவின் கவலைகளுக்கு Waze நிறுவனம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கான கொள்கைகளைத் தாங்கள் முழுமையாகப் பின்பற்றுவதாகவும் அது தெளிவுப்படுத்தியது.
தற்போது அரசுப் பணியாளர்கள் அதிகாரப்பூர்வ பணிகளின்போது Waze பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் அனைவருக்கும் முழுமையான தடை அமுல்படுத்தப்படுமா என்பது அரசாங்கத்தின் அடுத்தகட்ட முடிவைப் பொறுத்துள்ளது…



