
கோலாலம்பூர், அக்டோபர்-24,மலேசியர்கள் வீட்டில் சமைத்துச் சாப்பிடுவதற்குச் செலவிடும் தொகையை விட, வெளியில் உணவருந்துவதற்கு அதிகப் பணம் செலவிடுவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
Khazanah Research Institute வெளியிட்ட The State of Households 2026 அறிக்கையின் படி, 2024-ஆம் ஆண்டில் மலேசியக் குடும்பங்கள் வெளியில் உணவுண்ண மாதந்தோறும் சராசரியாக 902 ரிங்கிட் 70 சென் செலவிட்டுள்ளன.
ஆனால், வீட்டில் உணவு தயாரிப்பதற்கான பொருட்களுக்கு 875 ரிங்கிட் 80 சென் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
2019 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில், அனைத்து வருமானப் பிரிவினரிடையேயும் வெளியே உணவருந்துவதற்கான செலவு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 80 விழுக்காட்டுக் குடும்பங்களின் செலவு ஏறக்குறைய ஒன்றரை மடங்கு உயர்ந்துள்ளது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினமும் மாறிவரும் வாழ்க்கை முறையும் இதற்குக் காரணங்களாக இருக்கலாம் என ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, 2023-ஆம் ஆண்டு நிலவரப்படி, மலேசியப் பெரியவர்களில் 54.4 விழுக்காட்டினர் அதிக உடல் எடை அல்லது உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
வெளியே அடிக்கடி உணவருந்தும் பழக்கம், ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் நீரிழிவு உள்ளிட்ட தொற்றா நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.



